Latest posts
வணக்கம்
1/22/2006 4:17:01 PM
இந்த இடத்திலிருந்து இடம் மாறி இங்கு தமிழில் அவப்போது பதிந்து கொண்டிருந்த யான், தற்போது திரும்பவும் இடம் மாறி இந்த இடத்தில் எப்போதாவது வலைப்பதிகிறேன்.
அந்த இடம்
அமேரிக்காவில் தமிழன்
இடம் பெயர்தல்
4/29/2005 6:09:36 AM
லைவ் ஜேர்னல் ஒரு கட்டதிற்கு மேல் அலுத்து போனது.இடம் பெயர்ந்து தற்போது இங்கே வலைப்பதிய கொள்ளிடம் ஆரம்பித்தாயிற்று.
நரை
3/24/2005 10:26:16 PM
நரை பற்றி சில மணிகளுக்கு முன் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியதாயிற்று.
ஆரம்பத்தில்,மிளகுத்தூள்களிடையே உப்புதுகள்கள் போன்றும் பிறகு வெட்டி போட்ட சுண்டுவிரல் நகங்களாக (கழுவி பின் வெட்டப்பட்டது) எனது மீசையின் வலது பக்கம் இரு வெண்முடிகள், ஒரு இளங்காலை பொழுதில் தரிசனம் தந்தன.மீசையை அவப்போது கத்தரிக்கும் போதே இவ்விரு முடிகளும் பழுப்பு நிறங்களாய் இருந்ததைக் கண்டிருந்தேன்.அடிக்கடி சோளமாவு நொறுக்குத்தீனியை சால்சாவுடன் சாப்பிடும் போது சால்சா பட்டு இவையிரண்டும் நிறமாறியிருக்கலாம் என நினைத்து உடன் மறந்தும் போயிருந்தேன்.பின் வெண்ணிறமான இவை, வாழ்வின் அடுத்த கட்டம் ஆரம்பிக்கவிருப்பதின் அறிகுறி என பெருமைப்பட்டு சிந்தனைகளிலிருந்து ஒதுக்கி தள்ளிவிட்டு வாளாவிருந்தேன்.இது நடந்து தற்போது மூன்று வருடங்களாகியாயிற்று.
நான்கு மணிநேரங்களுக்கு முன்பு முடி வெட்ட ( மயிர் என்று சொன்னால் கெட்ட வார்த்தை, தமிழ்-இணையத்தில் கற்றுக் கொண்டது..சிறு வயதில் மயிர் வெட்டப் போகிறேன் எனச் சொல்லித்தான் பழக்கம்) போயிருந்த போது,சிறு சுருட்களாக மூடுதுணி மீது விழுந்த முடிகளை உற்று பார்க்க ஆரம்பித்தேன். உத்தேசமாக, ஆறு அடிகள் தூரத்தில் எதிரே உட்கார்ந்திருந்த அடுத்த வாடிக்கையாளர் முகத்தை பார்த்து தொலைக்க வேண்டியதையும் இவ்வகையில் தவிர்க்க முடிந்தது.முடி திருத்தகங்களின் இடநெருக்கடி ஒரு பெரிய இக்கட்டு.எதிரே உள்ளவரை பார்ப்பது சங்கடமாக இருந்து திடிரென்று வேறு திசையில் தலையைத் திருப்பினால்,மார்ச்சு மாதத்தில் தலைக்கு தீபாவளி என்றாகலாம்.ஐந்தாறு நிமிடங்கள் ஆழ்ந்து கவனித்து அவதானித்ததில்,குழற்கற்றைகள் நூற்றுக்கு பத்து என்ற கணக்கில்,கருப்பு வெள்ளையாக இருந்தது போய் தற்போது அறுபதுக்கு நாற்பது என்றாகியுள்ளது புரிந்து போனது.
2 கழுதை வயது தாண்டிய பின்னும், மாதமொருமுறை முடிவெட்ட வேண்டிய தேவையளவில்,முடியலங்காரத் தேவை இருக்கிறதே என மனம் சமாதானம் ஆகிறதா..மாட்டேன் என்கிறது..முதலில் சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஞாபகம் வந்தது,நண்பர்கோவர்த்தனனின் மடற்குழு அஞ்சல்கள்.ஒவ்வொரு அஞ்சலிலும் அவர் கையெழுத்துடன் வரும் பாரதி பாடலின் "நரை கூடிக் கிழம் பருவம் எய்தி” எனும் வரி, கொடுங்கூற்றுகள் பற்றி மனதை அலைய வைத்தது.மனனம் ஆன பாடல் வேறு.விடலைப் பருவத்தில் உற்று,உற்று பார்த்த சீர்காழி நகரத்து முடிதிருத்தக சுவர் 'ரிவால்வர் ரீட்டா' கிளு,கிளு படங்கள் தொடங்கி கேலப் நகரம்,நியு மெக்சிக்கொ முடிதிருத்தக விளையாட்டுப் பிள்ளை படங்கள் ( Playboy Magazine..வி.பிள்ளை எனும் கொச்சை மொழியாக்கத்தை வைத்து நானொரு சாதிவெறியன் என தார்க்குச்சி இன்ஸ்பெக்டர்கள் யாரும் நினைத்துக் கொள்ள வேண்டாம் ) பற்றிய குற்ற உணர்வுகள் முன் வந்து போயின.
இப்படியே எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு போனால்,முடிச்சாயம் அடிக்க வேண்டியிருக்குமோ என்றொரு ரொம்பவும் அவசியமான சிந்தனை வேறு வந்தோடியது.கன்னாபின்னாவென்று,சாயத்தை திப்பி திப்ப்பியாக அடித்துக் கொண்டு, கவலைப்பட்டுக் கொண்டுள்ளதைப் போன்ற கருஞ்சிவப்பு முடிக்காரர் நீலேஷ் பட்டேல் முகம் நினைவில் வந்து பயமுறுத்தி சென்றது.முடி நிறமாற்றத்தை வைத்து,மீசையை நீக்கினால் வேண்டாத விளைவுகள் நிகழலாம் என முன்னெச்செரிக்கைகளை சில தடவைகள் திருமதி அன்புடன் தெரிவித்தது மற்றும் "நீ மீசையை எடுத்துட்டே,சிட்னிக்கு உன்னை அடையாளம் தெரியாது.காலில் விழுந்து கடித்தாலும் கடிக்கும்” என என்னுடைய புத்திரன் ஒரு தடவை திருவாய் மலர்ந்தது, ஞாபகத்திற்கு வந்து தொலைத்தது.முடியெடுத்தால் கடியா என மனம் கலங்கி போனது.
ஒரு வாய் மோர்சாதத்தை ( 1% பாலாலான தயிர் = மோர்) புடலங்காய் பொரித்த குழம்பை தொட்டுக் கொண்டு உள்ளே தள்ளிவிட்டு,திரும்பவும் கணினி முன் வந்தால் மனம் லேசானது போன்றொரு உணர்வு." இப்ப என்னவாகிவிட்டது,முடி வெள்ளையானால் என்ன,இதனால் எத்தனையோ நன்மைகளும்” நிகழலாமே என்றொரு சுயபாராட்டுணர்வு முன்னின்று கை குலுக்குவது போலொரு பிரமை.பிரமைதான் என்றாலும் யார் கண்டார்..
இனிமேல், போக போக,"ஹலோ மிஸ்ட்டர்.பிஅஐ..? மன்னிக்க, எப்படி சொல்றது உங்க பெயரை” என பலரும் கேட்கலாம்.முன்னர் போல் அலுத்துக் கொள்ளாமல்,நானும்,சிறு மனநிறைவுடன், பிள்ளை என உச்சரிக்க வேண்டும் - LL எழுத்துக்களுக்கு ஒலியுண்டு,அவை மவுன எழுத்துகளன்று என விவரிக்கலாம்.பலரையும் தினம் சந்திக்கும் போது,"ஹே மேன்”.."வாட்ஸ் ஹேப்பனிங்” மற்றும் "ஒறா லே!” ( ஸ்பேனிஷில் வாட்ஸ் ஹேப்பனிங்) போன்ற கூவல்கள் குறைந்து,எல்லோரும் மரியாதையை சில அவுன்ஸ்கள் கூட்டலாம்.அடுத்ததாக புருவங்களும் நரைக்க ஆரம்பித்தால் கம்பீரம் என்பார்களே அது வந்து முகத்தில் குடியேறலாம்.வாராந்திர கட்டிட ஒப்ப்பந்தக்காரர்கள் கூட்டத்தில்,முழு சந்திரர்களும்,சூரியர்களும் அருகில் குழுமமியிருக்கும் போது,வெள்ளையாய் இருந்தாலும் ஏதோ முடியென்று ஒன்று உள்ளதே என மனம் நிறைவுறலாம்.
தேவையில்லாமல் மனம் பிராந்து பிடித்தலைந்தது தற்போது தெளிவாகிவிட்டது! நாளை காலை, முகத்தை பார்க்க வேண்டியிருக்கும் போது,சவரம் செய்ய வேண்டியிருக்கும் போது,மீசை வெண்முடிகளை,கருமுடிகளுக்கு இணையாக இருக்குமிடத்தில் இருக்கவிட முடியும் என்றே நினைக்கிறேன்.
ஆமாம்! முடி,மயிர்,உரோமம்,குழல் என ஏன் இத்தனை பெயர் தமிழில்,ஒரே சமாசாரத்திற்கு.இருக்கும் இடம் பொறுத்து பெயர் மாறலாம் என்றாலும்,வேறு எந்த மொழிகளிலாவது இப்படி உண்டா..இது பற்றி தமிழில் ஆராய்ந்து யாரேனும் முனைவர் பட்டம் வாங்கியுள்ளார்களா..
வாழ்த்துகள்
3/21/2005 6:29:31 AM
இன்று ( இந்திய நேரப்படி) திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்கும் பரிமேலழகர் மற்றும் அவருடைய
திருமதி அவர்களுக்கு உளம் நிறை நல்வாழ்த்துகள்.
மோடி
3/18/2005 6:25:28 PM
மோடிக்கு கடைசி நிமிடத்தில் அமேரிக்க நுழைவுரிமம் ரத்து செய்யப்பட்டது,பெரிதாகக் கொண்டாடப்பட வேண்டிய விடயமாய் எனக்குத் தோன்றவில்லை.கற்காலத்து மனிதர்களான,மதவெறியற்களான சவுதி மன்னர்களின் தோழர் ஜோர்ஜ் புஷ்ஷின் அரசு இதை செய்துள்ளது,வெறும் அனற் பெருமூச்சை மட்டுமே உண்டு பண்ணுகிறது.ஆளுக்கொரு நீதி என்பது மற்றொரு அமேரிக்க தலைகுனிவு.இன்று அமேரிக்காவில் கிட்டதட்ட வேடிக்கை பொருட்களாக ஆகிவிட்ட வெள்ளையின வெறியர்களுக்கு (KKK,Aryan nation) தங்களது பேச்சுரிமைகளை நிலைநாட்ட வழியிருக்கும் போது,அவர்களுடைய வெளிநாட்டு பழுப்பு சகோதரனுக்கு (ந.மோடி) இவ்வுரிமை மறுக்கப்பட்டுள்ளது ஜனநாயகமாய் தோன்றவில்லை.ஆயினும்,கடந்த அமேரிக்க அதிபர் தேர்தலில் புஷ்ஷுக்கு நிதியை ஆயிரக்கணக்கில் வாரிக்கொடுத்த குடியரசு கட்சி இந்திய ஆதரவாளர்களுக்கு,அதுவும் இந்து ஆதரவாளர்கள் பலருக்கு விளக்கெண்ணெய் குடித்த உணர்வு தேகம் எங்கும் வியாப்பித்திருக்கலாம் எனவெண்ணும் போது மனதிற்கு நிறைவாகவேயுள்ளது.
குஜராத் கலவரத்தின் போது முதலில் கொல்லப்பட்ட/பாதிக்கப்பட்ட இந்துக்களின் புகைப்படம் நான் இணையத்தில் கண்டதில்லை.அச்சமயம் உயிருக்கு மன்றாடிய முசுலிம் மதத்தைச் சார்ந்த ஒருவரின் படம் என்னை பலநாட்கள் பாதித்தது.

மதங்கள் அனைத்தும் சாக்கடைகள்.சில பாதாள சாக்கடைகள்,சில திறந்தவெளி,சில ஆறுகளில்-வாய்க்கால்களில் கலந்து தம்மை மறைத்துக் கொண்டுள்ளவை,இவையனைத்தும் நஞ்சு என்பதை மனிதன் உணராத வரை யாருக்கும் நிம்மதியிருக்க போவதில்லை.இம்மதங்கள் போற்றும் கடவுள் அல்லது கடவுளர்கள் எங்கேயாவது இருந்தால்,உடனோடி வந்து,தலையைக் காட்டி ஏதாவது செய்தால் நல்லது.